Quantcast
Channel: Dial for Books
Viewing all 3876 articles
Browse latest View live

மாணவனே உன்னை உலகம் கவனிக்க

$
0
0

மாணவனே உன்னை உலகம் கவனிக்க, சுவிர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 124, விலை 45ரூ.

பிளஸ் 2 பொதுத்தேர்வு நடைபெறும் இந்த நேரத்தில், வெளிவந்திருக்கும் இந்த நூல் கவனம் பெறுகிறது. இந்த நூலில், மாணவர்களுக்கு அடிக்கடி வரும் சந்தேகங்கள், கேள்விகள் என்னென்ன என்பதையும், அதற்கான தெளிவான பதில்களையும், ஆசிரியர் கூறியுள்ளார்.

பதில்கள், ஓர் ஆசிரியர் கூறுவது போல் அல்லாமல், ஓர் அண்ணன் தன் தம்பி, தங்கைகளுக்கு சொல்வதுபோல அளிக்கப்பட்டுள்ளன. பயம் இல்லாமல் பரீட்சை எழுதுவது எப்படி, எப்படி படித்தால் நிறைய மதிப்பெண் பெறலாம், ஞாபக மறதியை வெல்வது எப்படி என, மொத்தம், 150 கேள்விகளுக்குகான பதில்கள், இந்த நூலில் இடம் பெற்றுள்ளன.

இதில் மேலும் சிறப்பு பொருளடக்கத்திலேயே, 150 கேள்விகளையும் கொடுத்திருப்பதுதான். மாணவர்கள், தங்களுக்கு வேண்டிய கேள்விக்கான பதிலை மட்டும் வாசிப்பதற்கு ஏற்றவகையில் அந்த பொருளடக்கம் அமைந்துள்ளது, வரவேற்கத்தக்கது.

படித்ததை குறிப்புகளாக எழுதிக்கொள்ளுங்கள். காலையில் படிப்பது, மாலையில் படிப்பது என்பது முக்கியமல்ல. எப்போது படித்தாலும் ஆர்வத்துடன் படி என, மாணவர்களுக்கு நூல் ஆசிரியர் எளிமையாக விளக்குகிறார்.

-சி. கலா தம்பி.

நன்றி: தினமலர், 8/3/2015.

 

—-

சுபிட்சம் நல்கும் சுந்தரகாண்டம், சீனிவாச ராகவன், தங்கத்தாமரை பதிப்பகம், சென்னை, விலை 75ரூ.

ராமாயணத்தில் ஆஞ்சநேயரை கதாநாயகனாகக் கொண்டது சுந்தர காண்டம். இயற்கை அழகை வர்ணிக்கும் பகுதிகள் அதிகம். பலரும் இதைப் பாராயணம் செய்வார்கள். எனவே பாராயண பகுதிகளுடன் வெளிவந்துள்ளது இந்த நூல்.

நன்றி: தினத்தந்தி, 28/1/2015.


ஜீவா பார்வையில் கலை இலக்கியம்

$
0
0

ஜீவா பார்வையில் கலை இலக்கியம், கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், சென்னை, பக். 240, விலை 150ரூ.

கலை இலக்கியம் குறித்து, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் ப. ஜீவானந்தம் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்த நூல்.

சங்க இலக்கியம் முதல், தற்கால இலக்கியம் வரையிலும் வெளியாகியுள்ள அத்தனை படைப்புகள் பற்றிய தன் எண்ண ஓட்டங்களை, எழுத்தாக வடித்துள்ளார் ஜீவா.

மனிதத்தை மேம்படுத்தும் இலக்கியங்களை நல்ல இலக்கியங்களாகவும், சமுதாய மேம்பாட்டிற்கு துணைபுரியாத இலக்கியங்களை, நசிவு இலக்கியங்களாகவும், ஜீவா இனங்காட்டியுள்ளார்.

உலகத்தின் இலக்கிய முன்னோடிகளையும், அவர்களின் படைப்புகளையும், ஜீவா தன் மனத்தில் பதியம் போட்டிருந்ததை, நூலாசிரியர் ஜீவபாரதி அழகாக தொகுத்து தந்துள்ளார்.

ஜீவாவின் ஆளுமைக்கு, இந்த இலக்கியங்கள் தான் அடிப்படையாய் அமைந்தன எனலாம். தமிழ் இலக்கிய பாரம்பரியத்திலும், நவீன இலக்கியத்திலும் ஜீவா கொண்டிருந்த தெளிவுக்கு இந்த நூல் ஓர் எடுத்துக்காட்டு.

இந்த யு கம் சோஷலிச யுகம். இந்த மகத்தான யுகத்தை உருவாக்கி வரும் படைப்பு கலைஞர்கள், மகத்தான பாட்டாளி பெருமக்கள். புதிய இலக்கியம், இந்த யுகத்தையும் இதன் சிற்பிகளான கோடானுகோடி மக்களையும் எதிரொலிக்கிறது (பக். 85).

-முகிலை ராசபாண்டியன்.

நன்றி: தினமலர், 8/3/2015.

 

—-

சுழலும் கோள்காளல் விளையும் நிகழ்வுகள், கி. சங்கரநாராயணன், கருட ஆழ்வார் பதிப்பகம், திருநெல்வேலி, விலை 80ரூ.

ஜோதிட இயலின் அடிப்படைத் தத்துவம் புரிந்தவர்களுக்கும் அதனை ஆய்வு செய்து அனுபவம் பெற்றவர்களுக்கும் அதனை ஆய்வு செய்து அனுபவம் பெற்றவர்களுக்கும், அன்றாடம் ஜோதிடப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு பொக்கிஷமாக இந்த நூல் அமைந்துள்ளது.

நன்றி: தினத்தந்தி, 28/1/2015.

ஆன்மாவின் பயணங்கள்

$
0
0

ஆன்மாவின் பயணங்கள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், பக். 280, விலை 210ரூ.

நம் உடலை இயக்கும் ஆன்மா குறித்து, இந்த நூல் தெளிவாகக் கூறுகிறது. இந்த நூலில் கூறப்பட்டுள்ள சில பயிற்சிகள், தனக்கும் கடினமாக இன்று வரை இருந்து வருவதாகவும், வாசகர்கள் சலிப்படைய வேண்டாம் என்றும் ஆசிரியர் தெளிவுபடுத்துகிறார் (பக். 19).

ஆன்மா உடலை விட்டு நீங்கியபின், பல்வேறு உணர்வு நிலைக்கு செல்கிறது, தலைகீழாக எண்ணுவது ஒரு சிறந்த ஆழ்நிலை ஏற்படுத்தும் உத்தி, நெற்றியில் தட்டுவதன் மூலம், மனோவசிய நிலை மேலும் ஆழமாகி, நினைவுகூரல் திறன் அதிகரிக்கிறது.

குழந்தைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டியவை ஏராளம் உள்ளன என்று கூறுகிறார் ஆசிரியர். சில பேருக்கு எதிர்மறை மரணவாயில் அனுபவம் நேர்வதுண்டு என்றும் (பக். 183), மனோதத்துவ ஆய்வு என்பது ஆன்மிக தன்மையை புறக்கணிக்கும் வறட்டு தன்மை கொண்டது என்றும் (பக். 199), எல்லா மதங்களிலும் மகத்தான உண்மை, அழகு, ஞானம் ஆகியன பொதிந்துள்ளன என்றும்(பக். 199), எல்லா மதங்களிலும் மகத்தான உண்மை, அழகு, ஞானம் ஆகியன பொதிந்துள்ளன என்றும் (பக். 253), இந்த நூல் விவரிக்கிறது.

-டாக்டர் கலியன் சம்பத்து.

நன்றி: தினமலர், 8/3/2015.

 

—-

நானும் என் ‘நான்’களும், உமா சுப்பிரமணியன், அழகிய தமிழ் பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.

நம் ஒவ்வொருவருக்குள்ளும் எத்தனை நான், அகந்ததை நான், அதிகார நான், தன்முனைப்பு நான், தன்னம்பிக்கை நான் என பல்வேறு நான்கள் உள்ளன. புதிராகவும், தத்துவமாகவும் அமைந்த இந்த நூலின் தலைப்புக்கு ஏற்றாற் போன்று எழுதப்பட்ட கவிதைகள் அனைத்தும் சிந்திக்க வைப்பதுடன் வாழ்க்கைக்கு வழிகாட்டியாகவும் திகழ்கின்றன.

நன்றி: தினத்தந்தி, 28/1/2015.

100 சிறந்த சிறுகதைகள்

$
0
0

100 சிறந்த சிறுகதைகள், தொகுப்பாசிரியர் எஸ். ராமகிருஷ்ணன், டிஸ்கவரி புக் பேலஸ், சென்னை, பக். 1092, விலை 650ரூ.

எல்லாருக்கும் பிடித்த சிறுகதைகள் இவை எல்லாம் எனக்கு பிடித்த தமிழ் சிறுகதைகள். இந்த பட்டியலுக்கு வெளியிலும் சிறந்த கதைகள் உண்டு என்ற விளக்கத்தோடு, ஒரு நூறு சிறுகதைகளை எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் தொகுத்திருக்கிறார்.

யார் எங்கே பட்டியல் போட்டாலும் இடம்பெறும், புதுமைப்பித்தனின் ‘கடவுளும் கந்தசாமி பிள்ளையும்’, மவுனியின் ‘அழியாச் சுடர்’ போன்றவற்றோடு, எஸ்.ரா., ஐந்து முக்கிய வரையறைகளை வைத்து தேர்ந்தெடுத்த மற்ற கதைகளும், இடம்பெற்ற நூல் இது. இவை பெரும்பாலும், எல்லா இலக்கிய வாசகர்களுக்கும் பிடித்தவை.

அங்கொன்றும் இங்கொன்றுமாக கதைகளை படித்து வந்தபோது, கு.ப.ராஜகோபாலன் எழுதிய ‘விடியுமா’ கதை, சட்டென்று மனதில் கனமாக அப்பிக்கொண்டது.

‘சிவராமய்யர் டேஞ்சரஸ்’ என்று அந்த கால அபத்தமான ஆங்கிலத்தில் அடித்த தந்தி கிடைத்தது, ரயிலேறும் குடும்பம் பற்றிய கதை. சின்னச் சின்ன உரையாடல்களும், நம்பிக்கை எழுவதும், விழுவதுமாக கும்பகோணத்தில் இரவில் துவங்கிய பயணம், சென்னையில் முடியும்போது, அந்த சிவராமனின் உடலை மருத்துவமனையில் பெற்றுக் கொள்கின்றனர். மனதில் இருந்து பயம் தீர்கிறது. பின்? விடிந்துவிட்டது. கதை அவ்வளவுதான்.

மனதில் ஆழத்தில் பீதி அதுபாட்டிற்கு புழுப்போல துளைத்துக்கொண்டே இருந்தது. மேலே மட்டும் சமாதானம் கொஞ்ச நேரத்திற்கு ஒருதரம். அந்த திகில் மேல்மட்டத்திற்கு வந்து தலையெடுக்கும், உடம்பு பதறும், நெஞ்சு உலரும், அடி வயிறு கலங்கும், முகம் விகாரமடையும், மறுபடி மெதுவாக சமாதானத்தின் பலன் அதிகமாகும், பயத்தை கீழே அமுக்கி விடும்.

கதை கருவிலும், சொல்லும் முறையிலும், மொழி நுட்பத்திலும், கதையின் வடிவத்திலும் 70 ஆண்டுகளுக்கு முன், கு.ப.ரா. சாதித்தை, அடுத்து வந்தவர்கள் கடந்தனரா அல்லது எட்டினரா? என்ற கேள்வியும், இந்த கதைகளை படிக்கும்போது எழுகிறது.

இந்திய அளவில் தமிழ் சிறுகதைகளே முதலிடம் பிடிக்கின்றன என்ற எஸ்.ரா.வின் பிரகடனம் உண்மையாக இருக்கட்டும். ஒரே எழுத்தாளரின் ஒன்றுக்கு மேற்பட்ட கதைகள் புத்தகத்தில் அங்கங்கே தட்டுப்படுகின்றன, எஸ்.ரா, எழுதிய கதைகள் உட்பட, அதை தவிர்த்திருந்தால், இன்னும் 10 எழுத்தாளர்களின் அறிமுகம், இந்த புத்தகத்தின் மூலம் கிடைத்திருக்கலாம்.

-எழுத்தாளர் இரா. முருகன்.

நன்றி: தினமலர், 8/3/2015.

காலனியம் சமயம் பரவர் சில வரலாற்று குறிப்புகள்

$
0
0

காலனியம் சமயம் பரவர் சில வரலாற்று குறிப்புகள், ஜெ.எச். செல்வராஜ், வெய்தல் வெளியீடு, நாகர்கோவில், விலை 85ரு.

மகாகவி பாரதியின் சமகாலப் பண்டிதரும், இதழாளருமான மணப்பாடு ஜே.ஆர். மிராந்தாவின் பேரன், செல்வராஜ் மிராந்தா, 80. அவர் தற்போது தூத்துக்குடியில் வாழ்ந்து வருகிறார்.

கடந்த 1900ம் ஆண்டில் இருந்து, 1950ம் ஆண்டு வரை பிரிட்டிஷ் காலனி ஆதிக்கத்தில் இருந்த காலகட்டத்தில், தூத்துக்குடியில் பரவர்கள் வாழ்க்கையின் முதன்மையான சமூகவியல் பொருளியல் கூறுகளை இந்த நூலில் ஆவணப்படுத்தியுள்ளார்.

சுவையான பாரதி ஆய்வாளர்கள் கூட அறிந்திராத ஒரு நிகழ்வு பற்றிய பதிவுடன், முதல் அத்தியாயம் துவங்குகிறது. 1908ம் ஆண்டில் சுதேச கீதங்கள் என்ற தலைப்பில், பாரதி பாடல்களின் தொகுப்பு ஒன்று வெளியாயிற்று.

அதில் இடம் பெற்றிருந்த, ‘பறையருக்கும் இங்க தீயர் புலையருக்கும் விடுதலை, பரவரோடு குறவருக்கும் மறவருக்கும் விடுதலை’ என்ற பாடல் வரி, ஜே,ஆர். மிராந்தாவை உறுத்திற்று.

கொழும்பு நகரில் இருந்து வெளிவந்த, ‘திராவிட மித்திரன்’ (வாரம் இருமுறை வெளியாகும் இதழ்), பரதன் (மாத இதழ்) ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியரான மிராந்தா, தூத்துக்குடிக்கு வந்து, அங்கு கைவல்ய சுவாமி மடத்தில் தங்கியிருந்த பாரதியை சந்தித்து, பரவர் எக்காலத்திலும் தாழ்த்தப்பட்ட ஜாதியாகவோ, இழிந்த வர்ணத்தினராகவோ இருந்ததில்லையே, மோனைக்காக எங்கள் ஜாதி பெயரை சேர்த்து விட்டீர்களா? என்று கேட்டார். சற்றும் தாமதிக்காமல் பாரதி, கவிதை வடிவில் வீசிய பதிலை, ஜே.ஆர்.மிராந்தாவின் வாய்மொழியாக கேட்டு, 1954ல் தாம் எழுதி வைத்திருந்ததை, நூலாசிரியர் இந்த நூலில் பதிவு செய்துள்ளார்.

கடந்த, 1914ல் இந்தியாவின் புனித சங்கு (தி சேக்ரெட் சாங்க் ஆப் இண்டியா) என்ற நூலில், ஜேம்ஸ் ஹோர்னலும், 1917ல் திருநெல்வேலி மாவட்ட விவரச்சுவடியில் (டின்னவேலி டிஸ்ட்ரிக்ட் கெஜட்டீர்), மாவட்ட ஆட்சியர் ஹெச்.ஆர்.பேட்டும், பரவர் பற்றி எழுதி வைத்துள்ள குறிப்புகளில் இருந்து மேற்கோள் காட்டியும், பரவர்களின் குடிப்பழக்கம் எவ்வாறெல்லாம் அவர்கள் முன்னேற்றத்தை தடுத்து வந்துள்ளது என்பதை விளக்கியும், ஆசிரியர் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பரவர்களுக்கு உள்ளேயே, மூன்று வகை ஜாதி அடுக்குகள் இருப்பதும் பதிவாகி உள்ளது. தூத்துக்குடி பனிமய மாதா கோவில் தேர் திருவிழாவில், பரவர்களின் தலைவர், முதன் முதலில் வடம்பிடிப்பதே நடைமுறையாக இருந்துள்ளது. 1947ம் ஆண்டில், கத்தோலிக்க மத குருமாரே முதலில் வடம் பிடிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்ததன் விளைவாக பெரும் குழப்பம் ஏற்பட்டது. இந்த குழப்பத்தில் சிக்கி கொள்ளாமல், அப்போதைய மறைமாவட்ட ஆயர், வாடிகன் நகருக்குப் புறப்பட்டுச் சென்றுவிட்டார்.

அவருக்கு தந்தி அடித்து கேட்டபோது, மேலும் குழப்பம் வகையில் ஆயர் பதில் தந்தி கொடுத்த நிகழ்வு – இவை போன்ற சுவையான செய்திகள் இந்த நூலில் பதிவாகி உள்ளன.

-எஸ். ராமச்சந்திரன்.

நன்றி: தினமலர், 8/3/2015.

112 ரகசியங்கள்

$
0
0

112 ரகசியங்கள், ஓஷோ, ஓஷோ இன்டர்நேஷனல் நியூயார்க் பதிப்பகம்.

சோர்வை நீக்கி உற்சாகம் தரும் 112 ரகசியங்கள்

ஓஷோவின் 112 ரகசியங்கள் என்ற ஆங்கில நூலை சமீபத்தில் படித்தேன். ஓஷோ இன்டர்நேஷனல் நியூயார்க் பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டுள்ளது.

தியான வழிமுறைகளை, இந்த நூல் சொல்கிறது. சாதாரண மனிதனுக்கு, அவன் மொழியில் புரியும் வகையில், மிகுந்த ஆளுமையுடன் ஓஷோ எழுதியுள்ளார்.

அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறுசிறு மன உளைச்சல், உடல் வலி, சோர்வு ஆகியவற்றுக்கு நிவாரணம் அளிக்கும் வகையில், எவ்வித வழிகாட்டுதலும் இல்லாமல், ஓஷோ இந்த நூலில் கற்றுக் கொடுக்கிறார்.

நீண்ட நேரம் வேலை செய்யும்போது, உடலின் அனைத்து பாகங்களும் சோர்வு அடையும். அப்போது மருந்து உட்கொள்வதை விட, தியானம் செய்வதால் எதிர் விளைவுகள் ஏற்படாமல் சோர்விலிருந்து மீள்வதோடு, மனமும் உற்சாகம் அடையும் என ஓஷோ கூறுகிறார்.

மிக எளிய முறையில் அன்றாட பணிகளின் போதே செய்யும் தியானங்களாக, இவை இருப்பதுதான், சிறப்பு அம்சம். கண் விழிகளை உருட்டி செய்யும் தியானத்தின் பலனை, எளிதாக உணர முடியும். தியானத்தோடு, ஆன்மிகத்தையும் ஓஷோ போதிக்கிறார்.

ஆன்மா ஒன்றுதான், அது தங்கி இருக்கும் உடல்கள் தான் வேறானவை. ஒவ்வொரு மனிதனின் பிறப்பும், இறப்பும் தனியாக நடப்பவை. இதற்கு உட்பட்ட காலத்தில் சமூகம் என்ற கட்டமைப்பை மனிதன் ஏற்படுத்திக் கொள்கிறான். ஆனால் ஒவ்வொரு மனிதனும் தனியாகவே இயங்க வேண்டும். அவனுக்காக, சமூகம் இயங்காது என்பன போன்ற, ஓஷோவின் தத்துவங்களும், தியானத்தோடு இணைந்தவையே.

இறைவனை தேடுவதையும், அடைவதையும் பலர் பல வகையில் சொல்கின்றனர். இதில் ஓஷோ சொல்லும் வழிமுறைகள் யதார்த்தமாக, அன்றாட நடைமுறைகளோடு ஒன்றி, நவீனத் தன்மையோடு அமைந்திருப்பது, பெரும் ஈர்ப்பை அளிக்கின்றன.

-வீணை காயத்ரி,

துணைவேந்தர், இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகம்.

நன்றி: தினமலர், 8/3/2015.

காமராஜ்

$
0
0

காமராஜ், டி.எஸ். சொக்கலிங்கம், சந்தியா பதிப்பகம், சென்னை, பக். 152, விலை 110ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-366-2.html

காமராஜ் டி.எஸ். சொக்கலிங்கம் இருவருமே இருதுறை ஆளுமைகள். இருவரும் நெருங்கிப் பழகியவர்கள். இருப்பினும்கூட, புத்தகத்தின் ஒரேயொரு இடத்தில், “நானும் சென்றிருந்தேன்” என்று கூறுவதைத் தவிர, வேறு எந்த இடத்திலும் தன்னைப் பற்றிப் பேசாததே டி.எஸ்.சொக்கலிங்கத்தின் பெருமை.

தமிழ்நாட்டில் ஏன் நீதிக்கட்சி உருவானது என்பதையும், அரசியலில் பிராமணர் அல்லாதார் தலைமேயேற்கும் நிலையையும் முதல் அத்தியாயத்தில் விவரித்து, அதன் பிறகு காமராஜர் வரலாற்றை விவரிக்கும் பாங்கு, அன்றைய அரசியல் கொந்தளிப்பே காமராஜரின் வெற்றிக்கு அடித்தளம் என்பதைக் காட்டுகிறது.

காமராஜர் – ராஜாஜி இடையே கடைசி வரை நிலவிய பூசலுக்கான காரணங்களையும் சொல்லாமல் சொல்கிறது. காமராஜரின் அனைத்து ஆளுமைப் பண்புகளையும், அதன் அழுத்தங்களையும்இந்தப் புத்தகத்தில் காணலாம். அவர் முதல்வர் பதவிக்கு வந்ததோடு புத்தகம் முடிகிறது.

காமராஜ் ஆட்சியில் சாதித்ததை தனியாக எழுதத் திட்டமிட்டிருப்பாரோ! எனினும் இந்தப் புத்தகத்தின் கடைசி அட்டையில் காமராஜ் பற்றிய பெரியாரின் மேற்கோளும், முதல் பக்கத்தில் நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மேற்கோளும் காமராஜரின் ஆளுமை உயரத்துக்குச் சான்றுகள். 1955இல் வெளியான புத்தகம்.

இதன் எழுத்து நடை சற்ற வித்தியாசமாகத் தோன்றும். அதே காலகட்டத்தில் வெளியான மற்ற சஞ்சிகைகளின் எழுத்து நடையைப் படித்தவர்களுக்குத்தான் சொக்கலிங்கத்தின் தமிழ் எத்தனை சுவையானது என்பது புரியும். டி.எஸ்.சொக்கலிங்கம் பற்றி விக்ரமன் கட்டுரையும், கோடு உயர்ந்தது குன்றம் தாழ்ந்தது எனும் அண்ணாதுரையின் கட்டுரையும் நமக்குக் கூடுதல் போனஸ்!

நன்றி: தினமணி, 9/3/2015.

இந்திய விடுதலைப் போரில் சென்னை

$
0
0

இந்திய விடுதலைப் போரில் சென்னை, வி.சீ.கமலக்கண்ணன், விழிகள் பதிப்பகம், சென்னை, பக். 256, விலை 200ரூ.

சென்னை நகரில் நடந்த விடுதலைப் போர் நிகழ்வுகளே நூலின் மையப் பொருளாக இருந்தாலும், சென்னை மாநகர உருவாக்கம், சென்னையில் கல்வி நிறுவனங்களின் வளர்ச்சி, தேசிய இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி என நிறைய விஷயங்களை இந்நூல் பேசுகிறது.

விடுதலைப் போராட்டத்தின் வீச்சு சென்னையில் வாழ்ந்த எல்லாத் தரப்பு மக்களையும் எந்த அளவுக்கு ஈர்த்தது என்பதைத் தெரிந்து கொள்ள முடிகிறது. மாணவர்கள் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டதால் வந்தேமாதரம் என்று கூறம் மாணவர்களைப் பல்கலைக்கழகத் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என 1907 ஆம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழக செனட் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

1921இல் சென்னை மவுண்ட் சாலையில் இருந்த வில்லிங்டன் திரையரங்கத்தின் கட்டிடத்தில் பிரிட்டிஷ் அரசின் கொடி பறந்ததால் போராட்டக்காரர்கள் திரையரங்கின் மீது கல் எறிய, காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறது.

1930ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருவல்லிக்கேணிப் பகுதியில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் தொடர்புடையவர்களாகக் கருதப்பட்ட ஐந்து சிறுவர்கள் காவல்துறையால் பிடிக்கப்பட்டு பெற்றோர் முன்னிலையில் சவுக்கால் அடிக்கப்பட்டுள்ளனர்.

பிரிட்டிஷாரிடம் இருந்து நாடு விடுதலை பெற சாதாரண மக்கள் எவ்வளவு தீரமுடன் போராடினார்கள் என்பதற்கான ஆவணமாகத் திகழும் நூல்.

நன்றி: தினமணி, 9/3/2015.


அணு அதிசயம் அற்புதம் அபாயம்

$
0
0

அணு அதிசயம் அற்புதம் அபாயம், என். ராமதுரை, கிழக்கு பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 100ரூ.

To buy this Tamil book online: https://www.nhm.in/shop/978-81-8493-143-3.html

குழந்தைகளுக்கும் புரியும் விதத்தில் அணு என்றால் என்ன? புரோட்டான், எலக்ட்ரான், நியுட்ரான் என்றால் என்ன? ஐசோடோப் என்றால் என்ன? கதிர்வீச்சு என்றால் என்ன? அணு மின்கலங்கள் நம்பகமானவையா? அணுப்பிளப்புக்கும் அணுச்சேர்க்கைக்கும் என்ன வித்தியாசம்? என அணுவைச் சுற்றிச் சுற்றி அனைத்து விஷயங்களையும் கூறும் நூல்.

சித்தர்களின் இரசவாதம் மூலம் ஒரு பொருளைத் தங்கமாக மாற்ற முடியாது. ஆனால் செயற்கையான முறையில் தங்கத்தை உருவாக்க முடியும் என்கிறார் நூலாசிரியர்.

தங்கத்தில் 79 புரோட்டன்கள் உள்ளன. பிளாட்டினத்தில் 78 புரோட்டான்கள் உள்ளன. பாதரசத்தில் 80 புரோட்டான்கள் உள்ளன. பிளாட்டினத்தில் 1 புரோட்டானை அதிகரித்தால் அது தங்கமாகிவிடும். பாதரசத்தில் 1 புரோட்டானைக் குறைத்தால் அது தங்கமாகிவிடும் என்கிறார் நூலாசிரியர்.

ரேடியம் கண்டுபிடிக்கப்பட்டபோது அதன் கதிர்வீச்சுத் தன்மையின் அபாயம் தெரியாமல், கைக்கடிகார முள்களில், இரவில் வீடு திரும்பும்போது பளிச்சென்று  தெரிய கதவில் உள்ள சாவித் துவாரத்தைச் சுற்றி ரேடியம் பூசினர்.

ரேடியத்தின் கதிர்வீச்சால் பலர் நோயுற்று மரணமடைந்ததைத் தொடர்ந்தே அந்தப் பழக்கம் கைவிடப்பட்டது என்பன போன்ற புதிய சுவையான தகவல்களும் இந்நூலில் உண்டு. அறிவியலை எவ்வளவு சுவையாக எழுத முடியும் என்பதற்கு இந்நூல் ஒரு சான்று.

நன்றி: தினமணி, 9/3/2015.

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள்

$
0
0

இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்கள், யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை, விலை 700ரூ.

இந்திய விடுதலைப் போரில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறித்தவர்கள், சீக்கியர்கள் என மத பேதமின்றி எல்லோரும் பங்கேற்றனர்.

1857-1859களில் இந்தியா முழுவதும் நடைபெற்ற சிப்பாய்களின் எழுச்சி, புரட்சி குறித்தும், இந்திய சுதந்திரப் போராட்டம் பற்றியும் அதில் பங்கேற்ற இஸ்லாமிய மன்னர்கள், படைத்தளபதிகள், சிப்பாய்கள், மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் பொதுமக்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் இந்த நூலில் ஆசிரியர் செ. திவான் தொகுத்து வழங்கியுள்ளார்.

மேலும் இந்திய சுதந்திரப் போரில் தென்னகத்தின் பங்களிப்பு குறித்தும், அதில் பங்கேற்ற முஸ்லிம்கள் பற்றியும் இந்த நூலில் ஆதாரத்துடன் எடுத்துக் கூறியுள்ளார்.

நன்றி: தினத்தந்தி, 4/3/2015.

 

—-

ரியல் எஸ்டேட் A to Z, எஸ். அன்வர், குமுதம் வெளியீடு, சென்னை, விலை 80ரூ.

நிலம் வாங்குவது, வீடு கட்டுவது ஆகியவை பல பிரச்சினைகள் கொண்டவை. கவனமாக இல்லாவிட்டால் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள நேரிடும். ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் பற்றியும், அதில் இருந்து தப்புவதற்கான வழிகளையும் இந்நூல் விவரிக்கிறது. பயனுள்ள புத்தகம்.

நன்றி: தினத்தந்தி, 4/3/2015.

சிறுகதைச் சிகரங்கள் 7

$
0
0

சிறுகதைச் சிகரங்கள் 7, பிரபஞ்சன், கு.அழகிரிசாமி, சூடாமணி, புதுமைப்பித்தன், லா.ச.ராமாமிர்தம், வண்ணதாசன், அசோகமித்திரம், விகடன் பிரசுரம், சென்னை, விலை ரூ750 (7 புத்தகங்களும் சேர்த்து).

என் கதைகளில் எது நல்ல கதை? எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொன்றும் நல்ல கதையாகத்தான் இருக்கிறது. இப்போது படித்துப் பார்க்கும்போதும் எனக்கு வாசிக்கப் பரம சுகமாக இருக்கிறது – புதுமைப்பித்தன். இப்படி ஒருமுறை சொன்னார்.

நூற்றாண்டுகள் கடந்த தமிழ்ச் சிறுகதைகளில் எது நல்ல கதை, எவர் மட்டும் சிறந்த கதாசிரியர் என்று எப்படித் தேர்ந்தெடுக்க முடியும், கடலிலும் முதலில் ஒரு கைதானே அள்ள முடியும்? அதுதான் இந்த முயற்சி.

தமிழின் ஆகச்சிறந்த கதா, கலா ஆளுமைகளான புதுமைப்பித்தன் (சாமியாரும் குழந்தையும் சீடையும்), கு. அழகிரிசாமி (குமாரபுரம் ஸ்டேஷன்), லா.ச.ராமாமிர்தம் (உண்மையான தரிசனம்), ஆர்.சூடாமணி (நான்காம் ஆசிரமம்), அசோகமித்திரன் (விரிந்த வயல்வெளிக்கப்பால்…), பிரபஞ்சன் (இப்படியாக ஒரு சினேகிதி), வண்ணதாசன் (உயரப்பறத்தல்) ஆகிய ஏழு பேர் எழுத்துக்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட, குறிப்பிடத்தக்க சிறுகதைகள் அடங்கிய தொகுதிகள் இவை.

இந்த நூற்றாண்டின் தொடக்க காலத்தில் எழுதத் தொடங்கியவர்கள்முதல் இன்றும் எழுதிக்கொண்டு இருப்பவர்கள் வரையிலான இந்தத் தொகுப்பு தமிழ் இலக்கியத்தின் மிக நீண்ட தூரப்பயணத்தை மெல்லிய கோடாக இணைக்கிறது.

“இரவு சாப்பிட்டுப் படுத்தபிறகு அவள் தனக்கு ‘நன்றி’ சொல்லாமல் போனது ஞாபகம் வந்தது. சர்வசாதாரணமாக எளிய பகுதிகளைக்கூடப் புரிந்துகொள்ளாத மோசமான கல்வித்தரம் நினைவுக்கு வந்தது.

பல வகுப்புகளில் பெயிலாகியிருப்பான் என்று நினைத்தான். அழகாக இருந்தாலும் புத்திக்கூர்மை இல்லை. அத்துடன் நன்றி உணர்ச்சியும் இல்லை. எது இல்லாமல் போனால்தான் என்ன? அழகு இருந்தது.அப்புறம் இல்லாத எதைப்பற்றித்தான் என்ன கவலை?” – கு. அழகிரிசாமியின் வரிகள் இப்போது படித்தாலும் சுகன்யா என்ற அந்தக் கதாபாத்திரத்தை நோக்கி மனதை நகர்த்தும் வலிமை கொண்டவை.

“ஜோவின் கடிதத்தைப் படித்தாலும் அழுகைதான் வந்தது. ஜோ கோடு போட்ட தாளில் எழுதி இருந்தான். ஜோவின் கையெழுத்து வழக்கம்போல் மோசமாகவே இருந்தது. கையெழுத்து எப்படி இருந்தால் என்ன? ஜோ எப்போதும் சிரிக்கிறவன்”- வண்ணதாசன் வரிகள் ஜோவை தேடவைக்கும்.

‘எழுத்தாளனின் சொத்து அவனுடைய எழுத்துதான்’ என்று லா.ச.. ஒருமுறை சொன்னார். அந்த சொத்துகளை ஏழு புத்தகங்களாக ஒருசேரப் படிக்கும்போது… புதுமைப்பித்தனின் வாழ்க்கை, கு. அழகிரிசாமியின் யதார்த்தம், லா.ச.ரா-வின் தர்க்கம், சூடாமணியின் கலக்கம், அசோகமித்திரனின் எளிமை, பிரபஞ்சனின் அறம், வண்ணதாசனின் நளினம்… ஆகியவற்றை ஒன்றாக தரிசிக்கலாம். தமிழுக்குத்தான் எத்தைனைப் பரிமாணங்கள்.

-புத்தகன்.

நன்றி: ஜுனியவர் விகடன், 11/3/2015.

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை

$
0
0

சுவாமி விவேகானந்தர் பற்றி மகாகவி பாரதியார் கூறியவை, தொகுப்பாசிரியர் சுவாமி கமலாத்மானந்தர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை, பக். 440, விலை 200ரூ.

மகான் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஆத்மார்த்த சீடரான சுவாமி விவேகானந்தர், 19ஆம் நூற்றாண்டின் மிகப் பெரும் சிந்தனையாளர்களில் ஒருவர்.

இவர் ஆன்மீகம், அறிவியல், இலக்கியம், கலை, பெண்கள் முன்னேற்றம், பாமரர் முன்னேற்றம், மானிட முன்னேற்றம், சமூக சீர்திருத்தம், அரசியல் சிந்தனைகள், தேச முன்னேற்றம், விடுதலை வேட்கை, உலகம் தழுவிய கொள்கைகளின் வீச்சு… போன்ற உயர்ந்த சிறந்த சிந்தனைகளையும், செயல்பாடுகளையும் கொண்ட வேதாந்தி.

20ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்தில் தமிழகத்தில் வாழ்ந்த மகாகவி பாரதியும் இது போன்ற தளங்களில் உலாவிய மாமனிதர். இவ்விருவரும் தங்களின் கொள்கைகளுக்கு ஏற்ப வாழ்ந்தும், போதித்தும், மனித குலத்திற்கு வழிகாட்டிய சீலர்கள், தேச பக்தியும், தெய்வ பக்தியும் நிரம்பிய இவ்விருவரையும் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துரைக்கும் பொருட்டு உருவானதே இந்நூல்.

மதுரை ஸ்ரீராம கிருஷ்ண மடத்தின் தலைவராகிய இந்நூலாசிரியர், மகாகவி பாரதி தனது படைப்புகளில் ஆங்காங்கே சுவாமி விவேகானந்தரைப் பற்றிக் குறிப்பிட்டவற்றையெல்லாம் இந்நூலில் தொகுத்துள்ளார். இதுதவிர, சுவாமி சுபேதானந்தர், தான் குருவாக ஏற்பிப் போற்றிய சகோதரி நிவேதிதை போன்றவர்களைக் குறித்த பாரதியாரின் சிந்தனைகளுடன், மற்ற பெரியோர்களின் கருத்துக்களும் இந்நூலில் விரிவாகத் தொகுக்கப்பட்டுள்ளது.

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை பாதியின் படைப்புகளைத் தேடித் தேடிப் பதிப்பித்து வரும் சீனி.விசுவநாதனே, என் அளவில் – எனக்குத் தோன்றாத ஒரு பணி இந்த நூல்’ என்று தனது அணிந்துரையில் இந்நூலைப் பாராட்டியுள்ளது சாலப் பொருந்தும்!

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 11/3/2015.

சங்கீத வித்துவான்கள் சரித்திரம்

$
0
0

சங்கீத வித்துவான்கள் சரித்திரம், உ.வே. சாமிநாதையர், பதிப்பாசிரியர் மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம், டாக்டர் உ.வே.சாமிநாதையர் நூல் நிலையம் வெளியீடு, சென்னை, பக். 112, விலை 80ரூ.

இசையும் தமிழ்த் தாத்தாவும்

தமிழ், தெலுங்கு, கன்னட, மகாராஷ்டிர வாய்ப்பாடு மற்றும் வாத்திய இசை வித்துவான்கள் 402 பேர்களைப் பற்றி நூறு ஆண்டுகளுக்கு முன் தமிழ்த் தாத்தா உ.வே.சா. எழுதிய குறிப்புகளின் தொகுப்புதான் ‘சங்கீத வித்துவான்கள் சரித்திரம்’ என்ற நூல்.

1914ல் எழுதப்பட்ட வித்துவானக்ள் பற்றிய குறிப்புகள் இப்போதுதான் நூலாக அச்சிடப்பட்டுள்ளது. உ.வே.சாவின் குறிப்புகள் காலத்தால் சிதைந்துவிடாமல் பாதுகாக்கப்பட்டு, மகாவித்துவான் வே. சிவசுப்பிரமணியன், முனைவர் கோ. உத்திராடம் ஆகியோரால் நூலாகப் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

திருவையாறு தியாகப்பிரம்மம் நாதோ பாசகர் இசையில் மாமேதையாக வேண்டுமென்கிற ஆசையில் தனது குருவான ஹொண்டி சாம்பையரிடம் 18 ஆண்டுகள் குருகுலவாசம் செய்தார். மோகனம் வரதராஜ ஐயர் பூர்ணசந்திர உதயத்தில் குளக்கரையில் அமர்ந்து பாடும் மோகனராகம் கேட்க, உடையார்பாளையம் மகாராஜா யுவரங்க பூபதி பரதேசி வேடமிட்டு வந்தார்.

வீணை இசையில் தன்னைத் தோற்கடித்த மகனின் கையில் முத்தமிட்டுப் பாராட்டுவதுபோல் பிடித்து, வீணை வாசிக்க முடியாதபடி விரல்களைக் கடித்துவிட்ட பிறகும், உருக்கினால் கவர் செய்து அணிந்துகொண்டு வாசித்தவர் மகான் வேங்கட சுப்பையர். இப்படி சுவையான பல குறிப்புகள் இந்நூலின் வழி அறிய கிடைக்கின்றன.

தமிழிசை குறித்தும், இசை வித்துவான்கள் பற்றியும் ஆராய விரும்புபவர்களுக்கு அருமையான வழிகாட்டி இந்நூல்.

-மு.முருகேஷ்.

நன்றி: தி இந்து.

பாலச்சந்திரனின் இறுதியுணவு

$
0
0

பாலச்சந்திரனின் இறுதியுணவு, சுகுணாதிவாகர், பட்டாம்பூச்சி பதிப்பகம், சென்னை, வலை 50ரூ.

நம் காலத்தின் கவிதைகள்

சமகாலக் கவிதை அழகியல் மற்றும் கூர்ந்த அரசியல் உணர்வு இரண்டும் முயங்கும் கவிதைகளை எழுதிவருபவர் சுகுணாதிவாகர். பாலச்சந்திரனின் இறுதியுணவு என்னும் இந்த இரண்டாம் தொகுப்பில் இடையிடையே மிகவும் அந்தரங்கத் தொனியிலான கவிதைகளையும் எழுதியிருக்கிறார்.

சென்ற நூற்றாண்டில் எழுந்த தேசம், தேசியம், மொழி சார்ந்து உருவான அனைத்து லட்சியவாதங்களையும் கேள்வி கேட்கும் கவிதைகளாக இவரது கவிதைகள் இருக்கின்றன.

எல்லாப் போர்களிலும், ஒவ்வொரு மண்ணும் கைப்பற்றப்படும்போதோ அழியும்போதோ அழிவது பெண் உடல்கள்தான் என்பதை இவரது ‘மண்’ கவிதை துயரத்துடன் பேசுகிறது.

எளிய விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சுரண்டி உருவாக்கப்படும நகரத்து ஆடம்பரங்களையும், மற்ற மனிதர்கள் மேல் நாம் காட்டும் அலட்சியத்தையும் சுட்டிக்காட்டுகிறது ‘நறுமணங்களுக்கு அப்பால்’. நவீன ஜனநாயகமும் அறிவியலும் விடுதலைக் கோட்பாடுகளும் மக்களுக்குச் சுதந்திரத்தையும் நிம்மதியையும் தரவில்லை என்ற ஏக்கத்தை இவர் கவிதைகள் ஏக்கத்துடன், எள்ளலுடன், துயரத்துடன் முன்வைக்கின்றன. எந்த மாற்றங்களும் மனிதனின் அடிப்படைகளை மாற்றவில்லை என்பதை நாயகர்களின் வருகை சொல்கிறது. “அரசர் வருகிறார்! அரசி வருகிறார்! இளவரசர் வருகிறார்! இளவரசி வருகிறார்! தெருப்புழுதி பறக்கத் தேர்கள் விரைகின்றன. நரம்புகள் நாமிந்த பொற்காலத்தில் வசிக்கிறோம். தேர்க்கால்களின் கன்றுகள்
அடிபடுவது பற்றிக் வலையில்லை.
108ஐ அழைத்தால் உடனடி சிகிச்சை.”
என்று தொடங்கும் கவிதை நெருக்கடிநிலைக் காலகட்டத்தைப் பற்றி கவிதை எழுதிய ஆத்மாநாமை ஞாபகப்படுத்துகிறது. இன்னமும் நெருக்கடிநிலைக் காலகட்டம் தொடர்கிறது.
-வினுபவித்ரா.
நன்றி: தமிழ் இந்து, 7/3/2015.

உணவு சரித்திரம்

$
0
0

உணவு சரித்திரம், முகில், சிக்ஸ்த்சென்ஸ் பதிப்பகம், சென்னை, விலை 225ரூ.

உலகின் முதல் (சமைத்த) உணவு எது? பாறையை அடுப்பாக பயன்படுத்தி சுட்டு எடுக்கப்பட்ட ரொட்டியாக இருக்கலாம். உணவுக்கு சுவை எப்போது வந்து சேர்ந்தது? சந்தேகமில்லாமல் உப்பை உணவில் சேர்த்த பின்புதான்.

இந்தியர்கள் உலகிற்கு நன்கொடையாக வழங்கிய உணவுப் பண்டங்கள் என்னென்னஈ பிற நாட்டவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டு இந்தியர்கள் எந்த உணவுகளின் சுவைக்க அடிமையானார்கள்? என்பது போன்ற சுவையான உணவு வரலாற்றை பரிமாறுகிறது ‘உணவு சரித்திரம்’ நூல்.

மிளகு, ஏலக்காய் போன்ற நறுமணப் பொருட்கள்தான் இந்தியாவை நோக்கி பிற நாட்டவர்கள் படையெடுக்க காரணமாக இருந்தது, அதற்காக ‘ஸ்பைஸ் வார்ஸ்’ எனப்படும் பல போர்கள் நடந்திருக்கின்றன.

உப்பு, உணவுக்கு சுவை சேர்க்க மட்டுமின்றி, 14 ஆயிரம் விதங்களில் பயன்படுகிறது, உப்புக் கட்டியும், கோகோ விதைகளும் நாணயமாக பயன்படுத்தப்பட்டுள்ளன. இப்படியாக, ஒவ்வொருவரும் உண்ணும் உணவுப் பொருட்களுக்குப் பின், நாம் அறியாத மற்றும் அறிந்து கொள்ள வேண்டிய ஏராளமான விஷயங்கள் ஒளிந்திருப்பதை படம்பிடித்து பட்டியலிடும் ஆய்வு நூல் இது.

நன்றி: தினத்தந்தி, 4/3/2015.

 

—-

துளசிதாசர் இயற்றிய விநய பத்திரிகா, எம், கோவிந்தராஜன், வானதி பதிப்பகம், சென்னை, விலை 250ரூ.

நூலை வாசிப்பதன் மூலம் மனித ஒழுக்கம், நன்னடத்தை, பண்பாடு ஆகிய நற்குணங்களை பெறுவதுடன், இறைவனின் அருளை பெரும் இலக்கை நோக்கி இந்த பக்தி நூல் அழைத்து செல்கிறது. இதில் இடம் பெற்றுள்ள பாடல்கள் அனைத்தும் துளசிதாசர் எழுதியவையாகும்.

இந்தி மொழியில் வெளியின இந்த நூலை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் எளிய தமிழில் உரையாசிரியர் மொழி பெயர்த்திருப்பது கூடுதல் சிறப்பாகும்.

நன்றி: தினத்தந்தி, 4/3/2015.


நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள்

$
0
0

நூல் ஏணி தலித் பார்வையில் ஆசிரியர்கள், தொகுப்பு ரவிக்குமார், மணற்கேணி வெளியீடு, சென்னை, விலை 80ரூ.

பள்ளி நாட்களும் கல்லூரி நாட்களுமே சமூகத்தில் ஒரு மனிதரின் எதிர்காலத்தை உறுதி செய்கின்றன. அங்கு சந்திக்கும் ஆசிரியர்கள் மாணவர்களின் எதிர்காலத்தை செதுக்குகிறவர்களான இருக்கிறார்கள். இந்த நூல் தலித் எழுத்தாளர்கள் பார்வையில் அவர்கள் சந்தித்த ஆசிரியர்களை விவரிக்கிறது.

இந்த நூலில் எல். இளையபெருமாள், ஒவீயர் சந்துரு, ரவிக்குமார், அழகிய பெரியவன், அபிமானி, விழி.பா. இதையவேந்தன், அ.ஜெகந்நாதன், சிவா.சின்னப்பொடி ஆகியோரின் ஆசிரியர்கள் பற்றிய நினைவலைகள் இடம்பெற்றுள்ளன.

ஒவ்வொன்றும் மாறுபட்ட காலகட்டம், பின்னணி, இடம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. ஆப்பிளே சாப்பிட்டுப் பார்த்திராத அபிமானிக்கு ஆப்பிள் கொடுத்த ஆசிரியர், சிவா.சின்னப்பொடியை சுவரில் மோதிக் கதற வைத்த உயர்சாதி ஆசிரியர், சாதிப்பெயர் எழுதப்பட்ட பானையை தினமும் உடைத்த இளையபெருமாள், புத்தகங்களைச் சாப்பிட்டு ஆசிரியர்களிடம் வளரும் வாய்புப் பெற்ற ரவிக்குமார், பல்கலைக்கழகத்தில் போராடும் அ.ஜெகநாதன், அழகிய பெரியவனின் மனப்பலகையில் அன்பை எழுதியோர், விழி.பா. இதயவேந்தனின் அனுபவங்கள் என அழுத்தமான கட்டுரைகள் இந்த நூலில் இடம்பெற்றுள்ளன.

நன்றி: அந்திமழை, 1/12/2014.

 

—-

உல்லாசக் கப்பல் பயணம், சிங்கப்பூர் மலேசியா தாய்லாந்து, கிருத்திகா, தமிழ் காமிக்ஸ் உலகம், சென்னை, விலை 200ரூ.

கப்பல் பயணம்

சிங்கப்பூரில் இருந்து ஐந்துநாட்கள் குடும்பத்துடன் மலேசியா தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு ஐந்துமாடி கப்பலில் சுற்றுலா சென்று திரும்பிய அனுபவம்  இது.

நூலாசிரியரான கிருத்திகா வெறும் பயண அனுழுவமாக இல்லாமல் இதையொரு நாவல் வடிவமாக ஆக்கி சுவாரசியமாகத் தர முயற்சி செய்திருக்கிறார்.

உல்லாசக் கப்பலில் பயணம் செய்கையில் என்னென்ன நடக்கும்? கப்பல் எப்படி இருக்கும்? என்ன சாப்பாடு கிடைக்கும்? எப்படி பயணம் செய்வது போன்ற தகவல்களை அங்கங்கே தெளித்துக்கொண்டே போகிறார். எளிமையான நடை.

வாசிக்கும் அனைவரும் தாங்களும் இப்படியொரு கப்பலில் பயணம் செய்யமாட்டோமா என்றவொரு எண்ணத்தைத் தூண்டக்கூடியது இந்த நூல். இப்பயணத்தினூடாக சின்னதாக ஒரு காதல். பிரியும் மனநிலையில் இருக்கும் ஒரு தம்பதியினர் தங்களை உணர்ந்து ஒன்று சேர்தல் போன்ற கதைகளையும் கோர்த்துக் கொடுத்துள்ளார்.

நன்றி: அந்திமழை,  1/12/2014.

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட

$
0
0

மாணவர்கள் மதிப்பும் மதிப்பெண்களும் உயர்ந்திட, யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, குமுதம் பு(து)த்தகம், சென்னை, பக். 64, விலை 70ரூ.

மாணவர்கள் அதிக மதிப்பும் மதிப்பெண்ணும் பெற வேண்டும் என்ற நல்ல எண்ணத்துடன் குமுதம் பக்தி ஸ்பெஷலில், ஷெல்வீ எழுதிய பலன்களும் பரிகாரங்களும் தொகுத்து, இப்போது குமுதம் பு(து)த்தகம் வெளியீடு, நூலாக கொண்டு வந்திருக்கிறது.

ஒவ்வொரு பெற்றோருக்கும் தங்கள் பிள்ளைகள் நல்ல மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருக்கும். அவர்களின் முன்னேற்றத்தில் எல்லா பெற்றோருக்கும் கண்டிப்பாக அக்கறை இருக்கும்.

மாணவர்களின் ஒவ்வொரு ராசியையும் கூறி, அவர்களின் குண இயல்பைக் கூறி, இவர்கள் இப்படி நடந்துகொண்டால், தேர்வில் வெற்றி பெற முடியும் என்பதை ஒரு ஆசானாக நின்று பேசுகிறார்.

காலையில் கண் விழித்தது முதல் இரவு தூங்கும் வரை என்னென்ன துதி சொன்னால் அறிவைத் தெளிவாக்கும், எளிமையான துதிகள் மூலம் பரிகாரங்களை நிவர்த்தி, செய்யும் தன்மை என்று பெற்றோருக்கு உரிய அக்கறையுடன் ஷெல்வீ எழுதியிருக்கிறார்.

இதைப் படிக்கும் பெற்றோரும், மாணவர்களும் மதிப்புமிக்கவர்களாக அதிக மதிப்பெண் பெறுபவர்களாக திகழ்வது உறுதி.

நன்றி: குமுதம்,  23/3/2015.

 

—-

இந்திய நாட்டின் இஸ்லாமியர்களின் தேசப்பற்று, கமருன் பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 90ரூ.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இஸ்லாமியர்களின் பங்களிப்பு பற்றியும், இந்திய நாட்டின் மீது அவர்கள் கொண்டுள்ள தேசப்பற்று குறித்தும் என். முகம்மது மீரான் எழுதிய நூல்.

ஜாலியன் வாலாபாக்கில் உயிர் இழந்த முஸ்லிம்கள், விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய முஸ்லிம்கள் மற்றும் தமிழக முஸ்லிம்களின் பெயர்களை பட்டியலிட்டுள்ளார். இன்றைய இளைஞர் சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டிய அரிய செய்திகள் அடங்கியுள்ளன.

நன்றி: தினத்தந்தி, 18/3/2015.

வெள்ளி இரவொன்றில்

$
0
0

வெள்ளி இரவொன்றில், செல்மா மீரா, தமிழ் அலை, சென்னை, பக். 96, விலை 80ரூ.

கவிஞர் மீராவின் மகள் செல்மா மீரா. தந்தையைப் போலவே தன்னை ஒரு கவிஞராக அடையாளப்படுத்தி வெளியிட்டிருக்கும் இரண்டாம் தொகுப்பு இந்நூல்.

பெரும்பாலும் காதலின் சாரத்தையே கவிதைகளாக்கி பூக்க வைத்திருக்கிறார்.

‘நீ என் நிழலாக இருந்தால் இந்த பூமியின் பாரங்களை எளிதாக நான் சுமப்பேன்’ – காதலின் உன்னதமே இதுதான். மௌனத்திற்கும் ஒரு சப்தம் தருகிறார்.

காற்றின் கரங்களால் நம்மை தீண்டிப்பார்க்க வைக்கிறார். பல நூறு பௌர்ணமிகளை ஒன்று சேர்த்து வெள்ளி இரவைப் படைத்துக் காட்டி, அதன் வெளிச்சத்தில், நம்மை கனவு காண வைக்கிறார்.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 23/3/2015.

 

—-

மீண்டும் ஒரு மழைக்காலத்தில், கவிஞர் தியாகு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை, பக். 208, விலை 210ரூ.

21 சிறுகதைகள் கொண்ட தொகுப்பு நூல். சமூகம் பயன்பெற வேண்டி, சிறுகதைகள் படைப்போர் அருகிவரும் இந்த தருணத்தில், மனிதநேயத்துடனும் சமூகத்தின் மேன்மை கருதியும் படைக்கப்பட்ட கதைகளாக இவை விளங்குகின்றன.

வேலை பார்க்கச் செல்லும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ள வேண்டிய அவலம், காதலை வேறொரு கண்ணோட்டத்தில் பார்ப்பது, வீட்டு வேலைக்குச் செல்லும் ஏழைப் பெண்கள் படும் துயரங்கள், பாலியல் தொந்தரவுகள், குடும்ப உறவுகளின் மேன்மை, சித்தாள வேலைக்குச் செல்வோர் படும் அவஸ்தைகள் என்று எல்லா மட்டங்களிலும், அச்சமூகத்தில் நடக்கும் கொடுமைகளை ஒரு சமூகப் போராளியாக இருந்து களைந்தெடுக்க முயலும் இச்சிறுகதைகள். சிறுகதை வளர்ச்சிக்கு உதவும் நூல்.

-இரா. மணிகண்டன்.

நன்றி: குமுதம், 23/3/2015.

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள்

$
0
0

அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள், ஏ.பி.ஜெயச்சந்திரன், மணிமேகலைப் பிரசுரம், சென்னை, பக். 216, விலை 120ரூ.

ஸி.பி.ஐ. வழக்குகள், விஜிலன்ஸ் ஊழல் தடுப்பு வழக்குகள்… போன்ற பல கிரிமினல் வழக்குகளை ஏற்று நடத்திய இந்நூலாசிரியர், தமிழ்நாடு பிரஸ் கிளப் மற்றும் பிரபல நாளிதழ்களுக்கு சட்ட ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

இவர், அன்றாட வாழ்வில் தேவைப்படும் சட்டங்கள் குறித்த விவரங்களை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கில், முன்பு தினத்தந்தி ஞாயிறு மலரில் ‘சட்டம் தெரிந்துகொள்ளுங்கள்’ என்ற தலைப்பில் 100க்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதினார்.

அது வாசகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, அவை தொகுக்கப்பட்டு நூலாக வெளியாகியுள்ளது. அதன்படி இந்நூலின் முதல் கட்டுரையில் ‘முதல் தகவல் அறிக்கை பற்றிய சட்டம்’ குறித்து விளக்கம் தரப்பட்டுள்ளது.

அதில், கைது செய்வதற்குரிய குற்றங்களுக்கு மட்டும்தான் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும்; இந்தப் புகாரை யார் வேண்டுமானாலும் தரலாம்; புகாரை எழுத்து மூலமாகவோ, வாய்மொழி மூலமாகவோ தரலாம்; புகாரை பதிவு செய்வதும், அதற்கான நகலைப் பெறுவதும் இலவசமே; புகாரை போலீஸார் ஏற்க மறுத்தால் அடுத்தகட்ட நடிவடிக்கை என்ன; பொய்யான புகாராக இருந்தால் புகார் அளித்தவருக்கான தண்டனை என்ன; புகாரை தாமதமாக பதிவு செய்யக்கூடாது… என்று பல விபரங்கள் விளக்கப்பட்டுள்ளன.

இது போன்று புலன் விசாரணை பற்றிய சட்டம், மரண வாக்குமூலம், சாட்சிகள், மதம் சம்பந்தமான குற்றங்கள், அரசுக்கு எதிரான குற்றங்கள்; பாலியல் குற்றங்கள்.. என்று 82 வகையான குற்றங்களுக்கு உரிய சட்டங்கள் இந்நூலில் எளிய முறையில் விளக்கப்பட்டுள்ளன.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 25/3/2015.

பாலஸ்தீன வரலாறு முதல் பாகம்

$
0
0

பாலஸ்தீன வரலாறு முதல் பாகம், பேராசிரியர் எம்.ஹெச். ஜவாஹிருல்லா, புத்தொளி பதிப்பகம், சென்னை, பக். 168, விலை 80ரூ.

மனிதநேய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரான இந்நூலாசிரியர், கல்வி, அரசியல், ஆன்மிகம், பேச்சு, எழுத்து, ஆய்வுத்திறன்… என்று பன்முகத் தன்மை கொண்டவர்.

இவர் இந்நூலில் அரபுலகில் தோன்றிய இஸ்லாம், கிறிஸ்தவம், யூதம் ஆகிய முப்பெரும் மதங்களுக்கும் புராதான தொடர்புடைய நாடாக விளங்கும் பாலஸ்தீனத்தின் தொடக்க காலம் முதல், 13-ஆம் நூற்றாண்டு வரையிலான வரலாற்றை எளிமையாக எடுத்துரைத்துள்ளார்.

இந்நாட்டின் பிரசித்தி பெற்ற நகராகிய ஜெருஸலத்தில்தான், இந்த முப்பெரும் மதங்களும் சொந்தம் கொண்டாடும் புனித ஆலயங்களும் உள்ளன.

இப்புனித ஆலயங்கள் எப்படி, என்ன காரணங்களுக்காக உருவாகின? இந்நாடு எந்தெந்த காலகட்டங்களில் யார் யார் வசம் இருந்தது? உண்மையில் யூதர்கள் இந்நாட்டுக்குச் சொந்தம் கொண்டாட உரிமையுள்ளதா?

கி.பி. 7-ஆம் நூற்றாண்டில் இஸ்லாமியர்களின் வசம் இந்நாடு எப்படி வந்தது? அங்கு அவர்களின் ஆட்சி எப்படி இருந்தது? இதைத் தொடர்ந்து ஐரோப்பிய நாடுகள் பலவற்றையும் முஸ்லிம்கள் வெற்றி கொண்ட விபரம்;

11-ஆம் நூற்றாண்டில் முடிவுக்கு வந்த விபரம்; இதில் எகிப்திய அதிபர் சலாஹுத்தீனின் வீரதீரமிக்க பங்களிப்புகள்; இவருக்குப் பிறகு பாலஸ்தீனத்தில் முஸ்லிம் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்ட பின்னடைவுகள்; மங்கோலியர்களின் அட்டகாசம்… என்று பல்வேறு வரலாற்றுச் செய்திகளை புள்ளி விபரங்களுடன் ஆசிரியர் இந்நூலில் விறுவிறுப்பான நாவலைப் போன்று விவரித்துள்ளது சிறப்பானது.

-பரக்கத்.

நன்றி: துக்ளக், 18/3/2015.

Viewing all 3876 articles
Browse latest View live




Latest Images